குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் விலை வீழ்ச்சி
குன்னூரில் உள்ள ஏல மையத்தில் தேயிலை தூள் விலை வீழ்ச்சியடைந்தது.
குன்னூர்
குன்னூரில் உள்ள ஏல மையத்தில் தேயிலை தூள் விலை வீழ்ச்சியடைந்தது.
தேயிலை ஏலம்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டு தேயிலை தூளை ஏலம் எடுக்கின்றனர்.
ஏலம் வாரந்தோறும் வியாழன் வெள்ளி ஆகிய இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. விற்பனை எண் 11-க்கான ஏலம் கடந்த 17- ம் தேதி தொடங்கியது. இரு ஏலங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில் தற்போது நடைமுறை படுத்தப்பட்டு உள்ள பாரத் ஏல முறையில் குளறுபடி ஏற்ப்பட்டதால் அன்றைய தினம் ஏலம் ரத்து செய்யப்பட்டது.
கிலோவுக்கு ரூ.3 வீழ்ச்சி
அதன் பின்னர் தேயிலை வாரிய அறிவுரைப்படி ஏலம் கடந்த 18 மற்றும் 19-ந் தேதியும் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு மொத்தம் 15 லட்சத்து 83 ஆயிரம் கிலோ தேயிலை தூள் கொண்டு வரப்பட்டது. இதில் 11 லட்சத்து 18 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 65 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.
ஏலத்தில் 82 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது. விற்பனையான தேயிலை தூளின் அளவு 13 லட்சத்து 66 ஆயிரம் கிலோவாக இருந்தது. இதன் மதிப்பு ரூ.12 கோடியே 30 லட்சம் ஆகும். விற்பனையான அனைத்து தேயிலை தூள் ரகங்களுக்கும் ரூ.3-க்கு விலை வீழ்ச்சி ஏற்ப்பட்டது.
சி.டி.சி. ரகம்
சி.டி.சி. ரக தேயிலை தூளின் உயர்ந்தபட்ச விலையாக கிலோ ரூ.381 என்றும், ஆர்தோடக்ஸ் தேயிலை தூளின் உயர்ந்தபட்ச விலை கிலோ ரூ.230 என்றும் ஏலம் சென்றது.
சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.70 முதல் ரூ.74 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ரூ.126 முதல் ரூ.207 வரை ஏலம் சென்றது.
டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.74 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ரூ.143 ரூபாய் முதல் ரூ.225 வரை ஏலம் சென்றது.
விற்பனை எண் 12-க்கான ஏலம் வருகிற 24, 25 ஆகிய தேதியில் நடக்கிறது. இந்த ஏலத்திற்கு மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரம் கிலோ தேயிலை தூள் கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.