வல்லுனர்குழு பரிந்துரைப்படி குடகனாற்றில் கட்டப்பட்ட தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் கலெக்டரிடம், பா.ம.க. மாநில பொருளாளர் மனு
வல்லுனர்குழு பரிந்துரைப்படி குடகனாற்றில் கட்டப்பட்ட தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம், பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா மனு கொடுத்தார்.
திண்டுக்கல்:
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதையடுத்து திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அனுமந்தராயன்கோட்டை குடகனாறு மற்றும் ராஜவாய்க்கால் பிரச்சினை கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகிறது. குடகனாற்றில் கட்டப்பட்ட தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று வல்லுனர் குழுவும் பரிந்துரை செய்துள்ளது.
தடுப்புசுவரை அகற்ற வேண்டும்
ஆனால் இதுவரை தடுப்புச்சுவர் அகற்றப்படவில்லை. எனவே வல்லுனர் குழு பரிந்துரைத்தபடி தடுப்புச்சுவரை விரைவில் அகற்ற வேண்டும். மேலும் வல்லுனர் குழு பரிந்துரை தொடர்பான அறிக்கையையும் வெளியிட வேண்டும். இல்லையென்றால் பா.ம.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதேபோல் பட்டிவீரன்பட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட காரணம் சுற்றுலா வருபவர்களும், சமூக விரோதிகளும் பீடி, சிகரெட்டுகளை பிடித்துவிட்டு அணைக்காமல் அப்படியே வனப்பகுதியில் வீசிச்செல்வதே ஆகும். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கொடைக்கானலில் பீடி, சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். தாண்டிக்குடி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி அப்பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணேஷ்பாபு மனு கொடுத்தார்.
183 மனுக்கள்
நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 183 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து மாற்றுத்திறனாளிகள் 12 பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.