கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம் இருந்த முதியவர் பலி
கணவரால் கைவிடப்பட்ட மகளுக்கு நீதி வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம் இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மும்பை,
கணவரால் கைவிடப்பட்ட மகளுக்கு நீதி வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரதம் இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உண்ணாவிரதம்
துலே மாவட்டத்தை சேர்ந்தவர் சுதான்வா பதானே(வயது 70). இவரது மனைவி ரஞ்சனா. இவர்களது மகள் கணவரால் கைவிடப்பட்டார். இதனால் மகளுக்கு ஜீவனாம்சம் வழங்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தி சுதான்வா பதானே தனது மனைவியுடன் துலே மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 14-ந் தேதி தொடங்கினார்.
உணவு உட்கொள்ளாமல் போராட்டத்தை தொடர்ந்ததால், சுதான்வா பதானேயின் உடல்நிலை மோசமானது.
முதியவர் பலி
இருப்பினும் அவர் போராட்டத்தை கைவிட மறுத்து விட்டார். இந்தநிலையில் உண்ணாவிரதம் இருந்த சுதான்வா பதானே உடல் பலவீனம் அடைந்து நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மனைவி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் சுதான்வா பதானேயின் உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தை குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து அவர்கள், “சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த சுதான்வா பதானேயை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரது பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை. இதனால் தான் அவர் உயிரிழக்க நேரிட்டது. சுதான்வா பதானே குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம்” என்று தெரிவித்தனர்.
--------------