காயல்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி ஒயர்மேன் சாவு

காயல்பட்டினத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மின்தடையை சரி செய்ய முயன்ற ஒயர்மேன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்;

Update: 2022-03-21 13:27 GMT
ஆறுமுகநேரி:
காயல்பட்டினத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மின்தடையை சரி செய்ய முயன்ற ஒயர்மேன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
ஒயர்மேன்
தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதி முத்து நகர் 2-வது தெருவில் வசித்து வந்தவர் கோமதிநாயகம் மகன் கதிர்வேல் (வயது 52). காயல்பட்டினம் பகுதியில் ஒயர்மேனாக வேலை பார்த்து வந்தார். 
நேற்று முன்தினம் இரவு காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவில் உள்ள நூர்ஜஹான் பீவி என்பவரது வீட்டில் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், அதை சரி செய்து கொடுக்கமாறு கதிர்வேலை அழைத்துள்ளனர்.
அவர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது ஒரு மரத்தை வெட்டியதில் ஒயர் துண்டிக்கப்பட்டதால், அவர்களது வீட்டுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இரவு நேரமாக இருந்த நிலையில் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அலுமினிய ஏணியை வாங்கி வந்து, அதில் ஏறி எந்த இடத்தில் மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டு உள்ளது என்பதை பார்த்து, சரி செய்ய முயன்றுள்ளார்.
மின்சாரம் தாக்கி சாவு
அப்போது எதிர்பாராத விதமாக  மின்சாரம் தாக்கியதில் ஏணியிலிருந்து அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இது தொடர்பாக  தகவல் கிடைத்ததன் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மருத்துவமனைக்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். 
போலீசார் விசாரணை
மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்தபோன கதிர்வேலுக்கு திருமணமாகி புஷ்பம் என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 

மேலும் செய்திகள்