150 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
தனுஷ்கோடி பகுதியில் குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப் பட்டு இருந்த முட்டைகளில் இருந்து வெளியே வந்த ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
ராமேசுவரம்,
தனுஷ்கோடி பகுதியில் குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப் பட்டு இருந்த முட்டைகளில் இருந்து வெளியே வந்த ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
சீசன்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் டால்பின், கடல் பசு உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமைகள் அதிக அளவு உள்ளதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் ஆமைகள் முட்டையிடும் சீசன் டிசம்பர் மாதம் முதல் தொடங்கி ஏப்ரல் மாதம் வரையிலும் நடைபெறும்.
இந்த ஆண்டு ஆமைகள் முட்டையிட சீசன் ஜனவரி மாதம் தொடங்கியது. கடந்த 3 மாதத்திற்கு மேலாக தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமைகள் இட்டு சென்ற ஏராளமான முட்டைகள் குஞ்சு பொரிப்பதற்காக வனத் துறையினரால் சேகரிக்கப்பட்டு எம்.ஆர்.சத்திரம் கடற்கரை பகுதியில் உள்ள குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரை மணலில் குழி தோண்டி புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
வன நாள்
இந்தநிலையில் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் குஞ்சு பொரிப்பகத்தில் கடற்கரையில் குழிதோண்டி புதைத்து வைக்கப்பட்டு இருந்த முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரித்து தானாகவே வெளியே வந்தன. வன நாளை யொட்டி அந்த ஆமைக் குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகன்ஜெகதீஷ்சுதாகர், உதவி வனபாதுகாவலர் கணேசலிங்கம், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், ராமேசுவரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆமை குஞ்சுகளை கடலில் விடுவதை தொடங்கி வைத்தனர்.
கடற்கரை மணல் பரப்பில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள் மெதுவாக மணல் பரப்பில் ஊர்ந்தபடி கடலை நோக்கி சென்றது. ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டதையும் வனத்துறையால் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகள் மற்றும் குஞ்சு பொரிப்பதற்காக கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குஞ்சு பொரிப் பகத்தையும் ராமேசுவரம் மற்றும் மண்டபம் அருகே உள்ள குஞ்சார்வலசை பகுதியில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பார்த்து ரசித்தனர்.
விழிப்புணர்வு
இதில் வனச்சரகர் வெங்கடேஷ், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள 5 வகையான ஆமைகள் குறித்தும் அதில் சித்தாமை இந்தப் பகுதியில் அதிகம் உள்ளதாகவும், ஆமைகளின் உணவு, முட்டை போடும் விதம், குஞ்சு பொரிப்பது உள்ளிட்டவை குறித்தும் மாணவர்களிடம் விளக்கம் அளித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாவட்ட வன உயிரின காப்பாளர் பகன் ஜெகதீஷ்சுதாகர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளில் இந்த ஆண்டு 17 ஆயிரத்திற்கும் அதிகமான ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுஉள்ளன. இதில் தனுஷ்கோடி கடற்கரையில் மட்டும் கடந்த 3 மாதத்தில் 15 ஆயிரம் முட்டைகளை சேகரித்து குஞ்சு பொரிப்பதற்காக கடற்கரை மணலில் குஞ்சு பொரிப்பகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 132 குழிகளில் 15,026 ஆமை முட்டைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் 2 குழிகளில் இந்த ஆண்டு முதல் முறையாக 150 ஆமை குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வந்துள்ளன.
தற்போது இந்த குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆமை முட்டைகளை சேகரிக்க பட்டதுடன் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த ஆண்டு இன்னும் ஆமை முட்டைகள் சீசன் உள்ளதால் கடந்த ஆண்டைபோல் அதே எண்ணிக்கையில் ஆமை முட்டைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வலை களில் ஆமைகள் சிக்கினால் அதை உடனடியாக உயிருடன் கடலில் விட்டுவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகிழ்ச்சி
இதுகுறித்து ராமேசுவரம் எம்.ஆர்.டி. நகரை சேர்ந்த பள்ளி மாணவி சத்யா கூறியதாவது:- செய்திகளில் தான் ஆமைகளை பார்த்துள்ளேன். ஆனால் முதல்முறையாக தனுஷ்கோடி கடற்கரையில் ஆமை முட்டைகள் மற்றும் ஆமை குஞ்சுகளை நேரில் பார்த்ததுடன் அதன் வாழ்வு முறை, உணவு, அதை பாதுகாப்பது குறித்து வனத்துறையினர் மூலம் நடத்திய நிகழ்ச்சியில் தெரிந்துகொண்டேன்.
அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்தும் வனத்துறையினர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆமை குஞ்சுகள் கடற்கரை மணல் பரப்பில் ஊர்ந்தபடி கடலில் நீந்தி சென்றதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.