தூத்துக்குடியில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த ஆவணப்படம் வெளியீடு
தூத்துக்குடியில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த ஆவணப்படத்தை கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த ஆவணப்படத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.
நலத்திட்ட உதவி
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு செயற்கை கால், உபகரணத்தையும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 10 நரிக்குறவர் பயனாளிகளுக்கு ரேஷன் கார்டுகளையும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
ஆவணப்படம்
தொடர்ந்து நாடு, சுதந்திரம் அடைந்து 75-வது நினைவு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று அறியப்படாத தியாகிகளை பெருமைபடுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆவணப்படம் மற்றும் தியாகிகள் வாழ்ந்த இடங்களை பிரதிபலிக்கும் வரைபடத்தை, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டு பேசினார். அப்போது, 75- வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று வெளியுலகுக்கு அறியப்படாதவர்களை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும், அவர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் அதற்கு தேவையான நடவடிக்ககைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக யுடியூப் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் வீரபத்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வு
முன்னதாக தேசிய ஊட்டச்சத்து இயக்கம் (போஷன் அபியான்) கீழ் 1 முதல் 6 வயது வரையிலான அனைத்து ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறிதல் முகாம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மடத்தூர் அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு எடை மற்றும் உயரம் ஆகியவற்றை பரிசோதனை செய்யப்படுவதை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.