திருத்தணி நகராட்சி சாலைகளில் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கும் பணி தீவிரம்

திருத்தணி நகராட்சி சாலைகளில் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.

Update: 2022-03-21 13:01 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில், ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை, மற்றும் பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இந்நிலையில் திருட்டில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தவும், குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கடந்த 2016-ம் ஆண்டு வியாபாரிகள், தனியார் பள்ளிகள் மற்றும் பல்வேறு சங்கங்களின் உதவியுடன் நகர் முழுவதும் 72 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 6 மாதமாக நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள பல கேமராக்கள் மழை மற்றும் வெயில் காரணமாக பழுதடைந்துள்ளன.

இதனால் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணித் உத்தரவின் பேரில் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை பழுது பார்க்கும் பணி முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. மேலும் திருத்தணி நகராட்சியில் புதியதாக 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டு, அதை கூடிய விரைவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தொடங்கி வைக்க இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்