மாநகராட்சி நோட்டீசுக்கு எதிராக மத்திய மந்திரி நாராயண் ரானே ஐகோர்ட்டில் மனு
மும்பை மாநகராட்சியின் நோட்டீசுக்கு எதிராக நாராயண் ரானே மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மும்பை,
மும்பை மாநகராட்சியின் நோட்டீசுக்கு எதிராக நாராயண் ரானே மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
மாநகராட்சி நோட்டீஸ்
மத்திய மந்திரி நாராயண் ரானேவின் பங்களா மும்பை ஜூகு கடற்கரையோரம் உள்ளது. இந்த வீட்டில் கடந்த மாதம் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் சட்டவிரோதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக நாராயண் ரானேவின் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்தநிலையில் மும்பை மாநகராட்சி நாராயண் ரானே தரப்புக்கு மீண்டும் ஒரு நோட்டீசை அனுப்பியது. அந்த நோட்டீசில் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களை 15 நாட்களுக்குள் இடிக்குமாறு கூறி இருந்தது. மேலும் 15 நாட்களுக்குள் இடிக்காவிட்டால் மும்பை மாநகராட்சி சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்கும் என கூறியிருந்தது.
ஐகோர்ட்டில் மனு
இந்தநிலையில் மும்பை மாநகராட்சி கடந்த மாதம் 25-ந் தேதி, கடந்த 4, 16-ந் தேதி அனுப்பிய நோட்டீசுகளை ரத்து செய்யக்கோரி நாராயண் ரானே தரப்பு மும்பை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.ஏ. செய்யது அடங்கிய அமர்வு முன் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது.
மனுவில், தங்களுக்கு எதிரான நடவடிக்கை சட்டவிரோதமானது, அடிப்படை உரிமைக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
-----------------