ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
செய்யாறு அருகே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்கு வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு
செய்யாறு அருகே ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்கு வாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு இடம் ஆக்கிரமிப்பு
செய்யாறு தாலுகா பாராசூர் கிராமம் அருகே செய்யாறு- சேத்துப்பட்டு சாலையில் பாராசூர் கூட்ரோடு பகுதியில் சாலையோரம் உள்ள காலியிடங்களை ஆக்கிரமித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சிறு வணிக கடைகள், வீடுகளை கட்டி உள்ளனர்.
அந்த இடம் அரசு கால்நடை மருத்துவத்துறைக்குச் சொந்தமானதாகும். அந்த இடங்களை ஆக்கிரமித்து கட்டி உள்ள சிறுவணிக கடைகள், வீடுகள் என 14 கட்டிடங்களை காலி செய்ய வேண்டும், என அந்தக் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு வருவாய்த்துறையினர் நோட்டீசு அனுப்பி உள்ளனர். வருவாய்த்துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்களான கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வாக்கு வாதம்
தகவல் அறிந்ததும் செய்யாறு தாசில்தார் சுமதி, செய்யாறு துைண போலீஸ் சூப்பிரண்டு செந்தில் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடும் படி கூறினர்.
ஆனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தாசில்தாரை முற்றுகையிட்டு நாங்கள் 10 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம், 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ள நிலையில், குறிப்பிட்ட 14 கட்டிடங்களை மட்டும் காலி செய்ய நோட்டீசு அனுப்பி உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது, இந்தக் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் நாங்களும் இந்த இடத்தை காலி செய்வோம், எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.