காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள்- கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-21 10:59 GMT
மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளும் மற்ற நபர்களுக்கு இணையாக அனைத்து வகையிலும் வலுப்பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்ததோடு அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மனவளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தசைச்சிதைவு பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவருக்கான பராமரிப்பு உதவித்தொகை, சுய வேலைவாய்ப்பு (வங்கி கடன்), மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை, வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயணச்சலுகை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண சலுகை, அரசு பஸ்சில் மாற்றுத்திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பஸ் பயணச்சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு சக்கர நாற்காலி, காதொலி கருவி, கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் மற்றும் பிரெய்லி கைகடிகாரம், நவீன செயற்கை அவயம், செயற்கை அவயம், முடநீக்கு சாதனம் (காலிபர்), ஊன்றுகோல், கை, கால் பாதிக்கப்பட்டவருக்கான திருமண உதவித்தொகை, பார்வையற்றவருக்கான திருமண உதவித்தொகை, செவித்திறன் குறைவுடையோருக்கான திருமண உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கை, கால் பாதிக்கப்பட்டவர், காது கேளாத பேச்சு குறைபாடுள்ள நபர், பார்வையற்றவர் ஆகிய மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொண்டால் பட்டதாரி இல்லாத மாற்றுத்திறனாளிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் பட்டதாரி மாற்றுத்திறனாளிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கபடுகிறது.

2021-ம் ஆண்டு முதல் 28.2.2022 வரை

காஞ்சீபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2021-ம் ஆண்டு முதல் 28.2.2022 வரை 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான திருமண உதவித் தொகையும், 100 பயனாளிகளுக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பிலான தையல் எந்திரமும், 2,170 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 200 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து ஆயிரம் மதிப்பிலான செவித்திறன் கருவியும், 21 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 210 மதிப்பிலான மூன்று சக்கர நாற்காலியும், 4 பயனாளிகளுக்கு மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நாற்காலியும், 22 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 600 மதிப்பிலான தாங்கிகளும், 60 பயனாளிகளுக்கு கருப்பு கண்ணாடியும், ரூ.8 ஆயிரத்து 400 மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்