மடிப்பாக்கம் தி.மு.க. வட்ட செயலாளர் கொலை வழக்கில் கைதான கூலிப்படை தலைவன் வாக்குமூலம்
4 கிரவுண்டு இடத்தை அபகரிக்க இடையூறாக இருந்ததால் தி.மு.க. வட்ட செயலாளரை கொன்றோம் என கைதான கூலிப்படை தலைவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
தனிப்படை
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி சென்னை மாநகராட்சி 188-வது வார்டு தி.மு.க. வட்ட செயலாளர் செல்வத்தை கூலிப்படையினர் கொலை செய்தனர். கொலையாளிகளை பிடிக்க பரங்கிமலை துணை-கமிஷனர் பிரதீப் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வியாசர்பாடியை சேர்ந்த விக்னேஷ், கிஷோர் குமார், நவீன், சஞ்சய், புவனேஷ்வர் ஆகிய 5 பேரை கைது செய்தனர். 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.விசாரணையில் வியாசர்பாடியை சேர்ந்த கூலிப்படை தலைவன் முருகேசன் (வயது 30) என்பவர் சொன்னதால் தான் தி.மு.க. வட்ட செயலாளர் செல்வத்தை கொலை செய்தோம் என தெரிவித்தனர்.
வாக்குமூலம்
இந்த நிலையில் அம்பத்தூர் பகுதியில் தலைமறைவாக இருந்த கூலிப்படை தலைவன் முருகேசனை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.
போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
மடிப்பாக்கம் குபேரன் நகரில் கேட்பாரற்று 4 கிரவுண்டு நிலம் இருந்தது. அதை மதுரை பகுதியில் உள்ள பிரபல ரவுடி முத்து சரவணன், பாபு அண்ணன் ஆகியோர் அபகரிக்க முயன்றனர். அவர்களுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. அப்போது ‘‘அந்த இடத்தை நீ விற்று எங்களுக்கு தலா ரூ.50 லட்சம் தந்தால் போதும் மீதமுள்ள ரூ.1 கோடியை நீ எடுத்து கொள்’’ என கூறினர்.
அந்த இடத்தை விற்க முயன்றேன். இதற்கு செல்வம் இடையூறு செய்து வந்தார். இதனால் அவரை திட்டமிட்டு கொலை செய்தோம். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். முருகேசனை போலீசார் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முத்து சரவணன் மற்றும் பாபு அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.