ஊராட்சிகளுக்கு அரசின் நிதியை கூடுதலாக வழங்க கோரிக்கை
ஊராட்சிகளுக்கு அரசின் நிதியை கூடுதலாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய 3 ஒன்றியங்களை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் உதவி திட்ட இயக்குனர் சந்தானம் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலெக்டர் ரமண சரஸ்வதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஊராட்சி தலைவர்களின் பங்கு சிறப்பாக இருந்தது. மாவட்டத்தில் மகளிர் ஊராட்சித் தலைவர்கள் அதிக அளவில் உள்ளார்கள். ஆனால், சில ஊராட்சி தலைவர்களுக்கு அரசின் திட்டங்கள் பற்றி சரியாக புரிந்துணர்வு இல்லை. அரசின் திட்டங்களை நன்கு புரிந்து களப்பணியாற்ற வேண்டும், என்றார். கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் பேசுகையில், கிராம ஊராட்சிகளில் அரசால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. அந்த நிதியை கொண்டு வளர்ச்சி பணிகள் செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. தூய்மைப் பணியாளர்களுக்கு கூட சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே கூடுதல் நிதி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள் வரவேண்டிய நேரத்தை மாற்றியமைப்பதற்கு பரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு பணிகள் முடிவடைந்த திட்டங்களுக்கு உரிய ரசீது வராமல் நிலுவையில் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். சில ஊராட்சி செயலாளர்கள், அதிகாரிகளை வைத்துக்கொண்டு, ஊராட்சி தலைவர்களை மதிப்பதே இல்லை, என்றனர்.
கூட்டத்தில் 3 ஒன்றியங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.