நாளை நடக்கிறது பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா; 1,500 போலீசார் பாதுகாப்பு

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Update: 2022-03-20 21:27 GMT
சத்தியமங்கலம்
பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு கலந்து வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி பண்ணாரிக்கு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில், 15 துணை போலீஸ் சூப்பிரண்டு, 40 இன்ஸ்பெக்டர்கள், 100 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கண்காணிப்பு
மேலும் சீருடை அணியாத போலீசார் மாறுவேடத்திலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அதுமட்டுமின்றி பண்ணாரி கோவில் வளாகத்தில் 3 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு இதில் இருந்தவாறும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 
குண்டம் விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் வந்தனர். அவர்கள் கோவிலை சுற்றி வலம் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்