கிராவல் மண் திருட்டு; டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
திருமங்கலம் அருகே கிராவல் மண் அள்ளிய டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,
திருமங்கலம் சிந்துபட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாயில் சட்டவிேராதமாக கிராவல் மண்அள்ளுவதாக கிராம நிர்வாக அலுவலர் பரமேஷ்வரனுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது டிராக்டரில் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளிக் கொண்டு இருந்தனர்.
இது தொடர்பாக சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் பரமேஷ்வரன் புகார் கொடுத்தார். சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.போலீசாரை பார்த்ததும் பொக்லைன் எந்திரத்ைத ஓட்டிய டிரைவர் அங்கிருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். டிராக்டர் டிரைவரான மேட்டுபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி(வயது 42) போலீசில் சிக்கி கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். மண் அள்ள பயன்படுத்திய டிராக்டர், பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக தப்பி ஓடிய பொக்லைன் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.