மின்வேலி அமைத்து காட்டுயானையை கொன்று தந்தத்தை வெட்டி விற்க முயற்சி; 3 பேர் கைது
ஹாசனில் மின்வேலி அமைத்து காட்டுயானையை கொன்று தந்தத்தை வெட்டி எடுத்து அதை விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹாசன்:
காட்டுயானை அட்டகாசம்
ஹாசன் மாவட்டம் வீராபுரா கிராமத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் இக்கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் சிலர் சட்டவிரோதமாக தங்களது நிலங்களைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுபோல் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுயானை, இந்த கிராமத்தையொட்டிய விளைநிலம் ஒன்றில் நுழைய முயன்றது. அப்போது மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி அந்த காட்டுயானை பரிதாபமாக செத்தது.
3 பேர் கைது
இதையடுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரேகவுடா, நாகராஜ், திலக் ஆகியோர் அந்த காட்டுயானையின் உடலை துண்டு, துண்டாக வெட்டி வனப்பகுதியையொட்டி உள்ள இடத்தில் புதைத்துள்ளனர். மேலும் அவர்கள் 3 பேரும் காட்டுயானையின் உடலில் இருந்து தந்தங்களை வெட்டி உள்ளனர். பல லட்சம் மதிப்புள்ள அந்த தந்தங்களை ஹாசனில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளனர்.
பெங்களூருவில் சன்னம்மாகெரே அச்சுகட்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து அந்த யானை தந்தங்களை விற்க முயன்றுள்ளனர். இதுபற்றி அறிந்த பெங்களூரு போலீசார் சந்திரேகவுடா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணை மேற்கண்ட விஷயங்கள் போலீசாருக்கு தெரியவந்தன. மேலும் தந்ததுக்காக அவர்கள்தான் காட்டுயானையை கொல்ல விளைநிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்ததும் தெரியவந்தது.
தாசில்தார் முன்னிலையில்...
இதையடுத்து பெங்களூரு போலீசார் இதுபற்றி ஹாசன் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று பெங்களூரு போலீசார் சந்திரேகவுடா உள்ளிட்ட 3 பேரையும் ஹாசனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஹாசன் போலீசாருடன் இணைந்து தாசில்தார் முன்னிலையில் காட்டுயானையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு துண்டு, துண்டாக இருந்த காட்டுயானையின் உடல் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஹாசன் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.