மது விற்றவரை பிடிக்க விரட்டி சென்றபோது மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்; நம்பியூர் அருகே பரபரப்பு

மது விற்றவரை பிடிக்க விரட்டி சென்றபோது மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-20 21:01 GMT
நம்பியூர்
மது விற்றவரை பிடிக்க விரட்டி சென்றபோது மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
ரகசிய தகவல்
நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக ராஜமாணிக்கம் (வயது 57) என்பவர் பணியாற்றி வருகிறார். 
நம்பியூர் அருகே உள்ள கெடாரை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக வரப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணி அளவில் வரப்பாளையத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். 
படுகாயம்
அப்போது கெடாரையில் ஒருவர் மோட்டார்சைக்கிளில் மது விற்றுக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அவரை பிடிக்க போலீசார் சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த நபர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பினார். உடனே போலீசாரும் மோட்டார்சைக்கிளில் விரட்டினர். சிறிது தூரம் சென்றதும், சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், அந்த நபரின் சட்டையை பிடித்து இழுத்தார். அப்போது 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் படுகாயம் அடைந்தார். 
கைது
மேலும் அந்த நபரின் மோட்டார்சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் கீழே விழுந்து உடைந்தன. எனினும், மீதம் இருந்த மதுபாட்டில்களை அங்கேயே விட்டு விட்டு அந்த நபர் கீழே விழுந்த மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார். இதனிடையே படுகாயம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 
இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நம்பியூர் அருகே உள்ள ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த வேலன் என்கிற வேலுச்சாமி (55) என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்