பெண் என்ஜினீயரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி

பெண் என்ஜினீயரிடம் ரூ.3.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது

Update: 2022-03-20 20:50 GMT
திருச்சி
திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகள் கிருத்திகா. இவர் கடந்த ஆண்டு திருச்சி என்.ஐ.டி.யில் என்ஜினீயரிங் முடித்து வேலை தேடிக் கொண்டு இருந்தார். இதற்காக அவருடைய படிப்பு மற்றும் சுய விவரங்களை ஜாப் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து இருந்தார்.
 இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் புதிய எண்ணில் இருந்து கிருத்திகாவுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய நபர், தங்களுக்கு பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை கிடைத்திருப்பதாகவும், இதற்காக விண்ணப்பக்கட்டணம், தங்குமிட கட்டணம், ஆலோசனை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்துவதற்கு ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்தை வங்கி கணக்கில் இருந்து அனுப்பும்படி கூறியுள்ளார். இதனை நம்பிய கிருத்திகா பல்வேறு தவணைகளில் அவர் கேட்ட பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். 
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆனால், நீண்ட நாட்களாகியும் வேலை கிடைத்ததற்கான எந்த ஆணையும் வரவில்லை. இதையடுத்து அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிருத்திகா, திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்