5 நாட்கள் நடந்த நாட்டுப்புற கலை விழா நிறைவு

தஞ்சை தென்னகபண்பாட்டு மையத்தில் 5 நாட்கள் நடந்த நாட்டுப்புற கலை விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 15 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர்.

Update: 2022-03-20 20:37 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை தென்னகபண்பாட்டு மையத்தில் 5 நாட்கள் நடந்த நாட்டுப்புற கலை விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 15 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர்.
நாட்டுப்புற கலைவிழா
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆக்டேவ் என்கிற வடகிழக்கு மாநில கலைவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 15-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் கைவினைப்பொருட்கள் கண்காட்சியும் நடைபெற்றது.
இந்த கலைவிழாவை தொடர்ந்து தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடனங்களின் கலைவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கி இந்த விழா நேற்றுடன் நிறைவடைந்தது. ஒவ்வொரு நாட்களும் 11 குழுவினர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
450 கலைஞர்கள் பங்கேற்பு
இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்முகாஷ்மீர், அரியானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், குஜராத், புதுச்சேரி, தெலுங்கானா, ஒடிசா, மத்தியபிரதேசம், பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் இருந்து 30 குழுக்களை சேர்ந்த 450 கலைஞர்கள் பங்கேற்றனர். நேற்று நிறைவு நாள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்தமிழ்நாட்டை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற கரகாட்டம் மற்றும் காவடியாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ராஜஸ்தானின் ஜாரி நடனமும், மராட்டியத்தின் லாவணியாட்டமும், கர்நாடகாவின் டொல்லுகுனிதா நடனமும் நடைபெற்றது.
பொதுமக்கள் கூட்டம்
கேரளாவின் திருவாதிராகாளி நடனமும், உத்திரபிரதேசத்தின் மயூர்ஹோலி நடனமும், இமாச்சலபிரதேசத்தின் சிருமவுரி நடனமும், மத்திய பிரசேதத்தின் குடம்பாலா மற்றும் காரம்பைலா நடனமும், ராஜஸ்தானின் கால்பெலியா நடனமும், ஒடிசாவின் புலியாட்டமும், மாஸ்க் நடமனமும் நடைபெற்றது. நேற்று நிறைவு நாள் விழாவில் தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா கலந்து கொண்டு கலைஞர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் மருத்துவக்கல்லூரியில் இருந்து தென்னக பண்பாட்டு மையம் வரை போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. நேற்று கலை நிகழ்ச்சி நடைபெற்ற போது சிறிது நேரம் மழை பெய்ததால் கலைவிழா தாமதம் ஆனது.

மேலும் செய்திகள்