திருவெள்ளறை பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
சமயபுரம்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் உபகோவிலாகும். இக்கோவிலின் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை 4.45 மணிக்கு பெருமாள், தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஆனந்தராயர் மண்டபத்தை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து கருடன் படம் வரையப்பட்ட கொடி வீதி உலாவாக எடுத்து வரப்பட்டது.
பின்னர், பெருமாள்-தாயார் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பட்டயதாரர்கள், திருவெள்ளறை ஊராட்சி தலைவர் லதா கதிர்வேல் ஆகியோர் முன்னிலையில் காலை 5.30 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
சுவாமி புறப்பாடு
விழாவையொட்டி இன்று(திங்கட்கிழமை) காலை கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இரவு ஹனுமந்த வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு பெருமாள்-தாயார் ஆனந்தராயர் மண்டபத்திலிருந்து பல்லக்கில் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி ஸ்ரீரங்கம் வட காவிரி ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார்.
அதனைத்தொடர்ந்து 23-ந் தேதி அதிகாலை 1.30 மணிக்கு வழிநடை உபயங்கள் கண்டருளி கண்ணாடி அறை சென்றடைகிறார். அன்று இரவு கருட வாகனத்திலும், அடுத்தடுத்த நாட்களில் காலையில் ஹம்சவாகனம், இரவில் சேஷ வாகனம், சிம்மம், யானை ஆகிய வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். 26-ந் தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27-ந் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 28-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் நடைபெறுகிறது.