வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் கருத்து
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வேளாண் பட்ெஜட் குறித்து கருத்து தெரிவித்து உள்ளனர்.
விருதுநகர்,
தமிழக அரசின் வேளாண் பட்ெஜட் குறித்து விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:-
சர்க்கரை ஆலை
தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் விஜய முருகன் கூறுகையில், தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் பல சாதக அம்சங்கள் உள்ளது போல் பாதகமானஅம்சங்களும் உள்ளன. பனை விவசாயிகளை பாதுகாப்பது, வீடுகளுக்கு தென்னங்கன்று வழங்குதல், சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும். ஆனாலும் கரும்பு விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகை பற்றி எந்த அறிவிப்பும், கரும்பு விலை நிர்ணயம் பற்றி தகவலும் இல்லை. இதேபோன்று நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்வது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. தென்மாவட்டங்களில் முக்கிய சர்க்கரை ஆலையான அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
100 நாள் வேலை திட்டம்
தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி:- தமிழக அரசின் விவசாய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல்வேறு நல்ல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. எனினும் விவசாய வேலைகளுக்கு 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை பயன்படுத்தக்கூடிய அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. கேரள மாநிலத்தில் இதே போன்ற நடைமுறை அமலில் உள்ளது. விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காததால் பலர் நிலத்தை தரிசாக போட்டு விடுகின்றனர். விவசாயிகளுக்கு வரவேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை பெற்று தர எந்த நடவடிக்கையும் அறிவிக்கப்படவில்லை. விவசாயிகளுக்காக தனி பட்ஜெட் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் இன்னும் விவசாயிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மானியத்தொகை
தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா:-
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் நல்ல அம்சங்கள் இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிப்படி கரும்புக்கு மாநில மானியத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது பட்ஜெட்டில் டன்னுக்கு ரூ.195 என அறிவித்துள்ளது. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. நெல்லுக்கு உண்டான மானியத் தொகை குவிண்டாலுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகை தான் உள்ளது. கூடுதலாக அறிவிக்கவில்லை. மற்ற பருப்பு வகை உற்பத்திக்கு உண்டான ஊக்க நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை.
நெல் சாகுபடி
வத்திராயிருப்பை சேர்ந்த விவசாயி பிரகலாதன்:-
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நெல் நடவிற்கு தற்போது வேலை ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை அரசு திருத்திய நெல் சாகுபடி செய்வதற்கு எந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கலாம். மத்திய அரசு கொடுப்பதை போன்று மாதம் விவசாயிகளுக்கு உதவித்தொகை கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்களை அறிவிக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது.