தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

Update: 2022-03-20 20:14 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கி பேசினார்.
அவர் பேசுகையில், தொழில் துறையில் தமிழகத்தை முதலிடம் பெற்ற மாநிலமாக மாற்றுவதுடன், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அரியலூர் மாவட்டத்தில் 6 பெரிய சிமெண்டு ஆலைகள் இருந்தாலும் நம்முடைய பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக சிமெண்டு ஆலை நிறுவனங்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். இங்குள்ள நிறுவனங்கள் பொருளீட்டுவது இந்த அரியலூர் மண்ணில் இருந்துதான். ஈட்டுகின்ற பொருளுக்கு ஈடு செய்யாவிட்டாலும், இந்த பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும். அதேபோல் வருடாவருடம் இங்கே படிக்கின்ற மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க சிமெண்டு ஆலைகள் முன்வர வேண்டும். மேலும் இந்த கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக தொழில்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மூலமாக கூட்டம் நடத்தி, அவர்கள் மூலமாகத்தான் இதற்கு ஒரு தீர்வுகாண வேண்டும் என்றால் அதற்கும் நான் முழு முயற்சி எடுப்பேன், என்றார்.
இந்த முகாமில் 68 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 204 பேருக்கு பணி ஆணைகளும், 63 பேருக்கு முதற்கட்ட தேர்விற்கான ஆணைகளும், இந்நிகழ்ச்சியில் 9 திறன் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு 26 பேருக்கு திறன் பயிற்சி அளிப்பதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. இம்முகாமில் 1,968 வேலைநாடுனர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்