ஆற்றில் லாரி பாய்ந்தது வாலிபர் பலி

தஞ்சை அருகே பாலத்தில் சென்ற போது ஆற்றில் லாரி பாய்ந்தது. இதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-03-20 20:04 GMT
திருக்காட்டுப்பள்ளி:
தஞ்சை அருகே பாலத்தில் சென்ற போது ஆற்றில் லாரி பாய்ந்தது. இதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர். 
ஆற்றில் லாரி பாய்ந்தது
திருச்சியிலிருந்து ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி நோக்கி நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. லாரியை திருச்சி மாவட்டம் நாகமங்கலத்தைச் சேர்ந்த முகைதீன் ஓட்டி வந்தார். திருச்சி நாகமங்கலத்தைச் சேர்ந்த சிலர் லோடுகளை இறக்குவதற்காக அதே லாரியில் வந்்தனர். பூதலூரை கடந்து திருக்காட்டுப்பள்ளியை நோக்கி விண்ணமங்கலம் வெண்ணாற்று பாலத்தில்  லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி  எதிர்பாராத விதமாக ஆற்றுப்பாலத்தின் கிழக்கு கைப்பிடி சுவரை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. சுமார் 150 அடி உயரத்தில் இருந்து திடீரென ஆற்றுக்குள் லாரி பாய்ந்ததால் அதில் இருந்தவர்கள் அச்சத்தில் கூச்சலி்ட்டனர். 
மீட்பு பணி
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்  விபத்து குறித்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் பூதலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
இதில் லாரி டிரைவர் திருச்சி நாகமங்கலத்தை சேர்ந்த முைகதீன்(வயது45), அசோகன்(35), கருப்புசாமி(29) நியாஸ்அகமதுல்லா(20), சக்தி (24) ஆகிய 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
பரிதாப சாவு
லாரியில் வந்த கார்த்திக்(35) லாரியின் அடியில் சிக்கிக்கொண்டார். இதனால் அவருடைய நிலை என்ன? என்பது குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து கிரேன் உதவியுடன் ஆற்றில் விழுந்த லாரியை அகற்றினர். அப்போது லாரிக்கு அடியில் இருந்து கார்த்திக் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல்  பூதலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.  பாலத்தின் மேலிருந்து கிரேன் மூலம் லாாியை மீட்கும் பணி நடைபெற்றதால் திருக்காட்டுப்பள்ளி- பூதலூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்