வேம்படி மகாமாரியம்மன் கோவில் திருவிழா
வலங்கைமானில் வேம்படி மகாமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டி தெருவில் வேம்படி மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதேபோல இந்த ஆண்டும் திருவிழா கடந்த 4-ந்தேதி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து 6-ந்தேதி முதல் காப்பும், 13-ந்தேதி 2-வது காப்பும் கட்டப்பட்டன. இதைதொடர்ந்து விழா நாட்களில் தினசரி அம்மன் மயில் வாகனம், அன்னம் மற்றும் குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சி முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் அன்னம் வாகனத்தில் அம்மன் வீதிஉலா காட்சியுடன், கோவில் வளாகத்தில் இருந்து கரகம் புறப்பட்டு, செட்டிதெரு, சுப்பன்நாயக்கன் தெரு, உப்புகாரத்தெரு, எல்லையம்மன் கோவில் தெருவுக்கு வந்தடைந்தது. இதையடுத்து நேர்த்திக்கடன் செலுத்தக்கூடிய செம்மறி ஆட்டை அழைத்து கொண்டு கரகம் புறப்பட்டது. பின்னர் வடக்கு அக்ரஹாரம், கடைத்தெரு வழியாக சென்று கோவிலை அடைந்தது. பின்னர் செம்மறி ஆடு செடில் மரத்தில் ஏற்றப்பட்டு மும்முறை வலம் வரும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக கோவில் கருவறையில் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.