யானை தந்தம், மான் கொம்பு, புலி பல் வைத்து நகைகள் விற்பனை
சேலத்தில் யானை தந்தம், மான் கொம்பு, புலி பல் வைத்து நகைகள் விற்பனை செய்தது தொடர்பாக நரிக்குறவர் உள்பட 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:-
சேலத்தில் யானை தந்தம், மான் கொம்பு, புலி பல் வைத்து நகைகள் விற்பனை செய்தது தொடர்பாக நரிக்குறவர் உள்பட 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானை தந்தம், மான் கொம்பு
சேலம் மாவட்டத்தில் குரும்பப்பட்டி, ஏற்காடு, கல்வராயன் மலை உள்ளிட்ட வனப்பகுதியில் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வன விலங்குகளை வேட்டையாடும் நபர்களை வனத்துறை அதிகாரிகள் பிடித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், சேலத்தில் ஒரு நகைக்கடையில் யானை தந்தம், புலி நகம், மான் கொம்பு ஆகியவைகளை பயன்படுத்தி விலை உயர்ந்த நகைகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக சென்னை வனபாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் குற்றப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மாறுவேடத்தில்...
அதன்பேரில், உதவி வனபாதுகாவலர் மகேந்திரன், சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் சின்னத்தம்பி மற்றும் வனத்துறையினர் சிலர் வாடிக்கையாளர்கள் போல் நேற்று முன்தினம் மாறுவேடத்தில் சேலம் டவுன் பகுதியில் உள்ள சம்பந்தப்பட்ட நகைக்கடைக்கு சென்றனர். பின்னர் அவர்கள், யானை தந்தம், புலி நகம் வைத்து நகைகள் விற்பனைக்கு உள்ளதா? என்றும், அவ்வாறு இருந்தால் அதை காண்பிக்குமாறும் கேட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த நகைக்கடையில் இருந்தவர், சில தங்க நகை ஆபரணங்களை எடுத்து காண்பித்துள்ளார். அப்போது, அந்த நகையில் மான் கொம்பு, புலி பல் ஆகியவற்றின் பயன்பாடு இருப்பது தெரியவந்ததால் அவரை வனத்துறையினர் பிடித்து, விசாரணை நடத்துவதற்காக சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
4 பேரிடம் விசாரணை
அதாவது, சேலத்தை சேர்ந்த மற்றொரு நகைக்கடைக்காரர் ஒருவருக்கும், ஒரு பேட்டரி கடைக்காரர் மற்றும் பஞ்சதாங்கி ஏரியை சேர்ந்த ஒரு நரிக்குறவர் ஆகியோர் சேர்ந்து யானை தந்தம், மான் கொம்பு, புலி பல், நரிபல் ஆகியவற்றை தங்க நகைகளில் பயன்படுத்தி விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.
மேலும் இவர்கள் புலி பல்லுக்கு பதில், நரி பல்லை பாலீஷ் செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நரிக்குறவர் உள்பட 4 பேரை பிடித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானை தந்தம் பறிமுதல்
அவர்களிடம் இருந்து மான் கொம்பு-2, யானை தந்தம்-2 மற்றும் புலி பல், நரி நகம் போன்று தோற்றமுடைய பிளாஸ்டிக் பல், நகம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு யானை தந்தம், மான் கொம்பு, புலி பல், நரி நகம் எப்படி கிடைத்தது?, இவர்களுக்கு வேறு யாரிடமும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் யானை தந்தம், மான் கொம்பு, புலி பல் வைத்து நகைகள் விற்பனை செய்தது தொடர்பாக 4 பேர் பிடிப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.