இசை கலைஞர் கட்டையால் அடித்துக்கொலை
சேலத்தில் கட்டையால் அடித்து இசை கலைஞரை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;
சேலம்:-
சேலத்தில் கட்டையால் அடித்து இசை கலைஞரை கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இசை கலைஞர்
சேலம் வீராணம் அருகே உள்ள குள்ளம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 56). இசை கலைஞர். வலசையூர் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் சந்திரன் (50). தொழிலாளி. அவ்வப்போது சாலையோரம் கிடக்கும் பழைய பேப்பர்களை சேகரித்து அதை விற்பனையும் செய்து வருகிறார். இவருடைய மனைவி மாரியம்மாள் (48).
கந்தசாமியும், சந்திரனும் நண்பர்கள். இதனால் கந்தசாமி அடிக்கடி, சந்திரன் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது கந்தசாமிக்கும், மாரியம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
கட்டையால் தாக்குதல்
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வலசையூர் பஸ் நிறுத்தம் அருகே கந்தசாமி, மாரியம்மாளுடன் பேசிக்கொண்டிருந்தார். இதை சந்திரன் பார்த்தார். அப்போது எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து உள்ளாயா? என்று கேட்டு உள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரன், அந்த பகுதியில் கிடந்த கட்டையை எடுத்து கந்தசாமியின் தலை உள்பட பல இடங்களில் தாக்கினார். இதில் கந்தசாமியின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறி மயங்கி விழுந்தார்.
கைது
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து சந்திரனை கைது செய்தனர்.
சேலம் அருகே இசை கலைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.