கொலை மிரட்டல் விடுத்தவருக்கு வலைவீச்சு
சீர்காழி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் வலைவீச்சு தேடி வருகின்றனர்.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிமாறன் (வயது31) என்பவர் நேற்று முன்தினம் செங்கமேடு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது தன்னை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கியதாக சீர்காழி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கொள்ளிடம் தைக்கால் பைக்கால் மதகடி பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்கிற செந்தில் என்பவரிடம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் போனில் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.
அப்போது அவர், சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அர்ஜூனனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் சீர்காழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து தலைமறைவாக உள்ள செந்திலை தேடி வருகின்றனர். மேலும் செல்போனில் அழைத்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனனை, செந்தில் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.