நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1.34 லட்சம் மோசடி
நிதி நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1.34 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
நிதி நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.1.34 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிதி நிறுவன ஊழியர்
அம்பை தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 30). இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் குமரேசனின் செல்போன் எண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் மறு முனையில் பேசிய நபர், தான் குறிப்பிட்ட ஒரு வங்கியில் இருந்து பேசுவதாகவும், அந்த வங்கியில் இருந்து நீங்கள் சிறந்த பரிமாற்றம் செய்ததற்கான போனஸ் பாயிண்ட் கிடைத்திருப்பதாகவும், அதன்மூலம் பரிசுகளை பெறுவதற்கு ஒரு லிங்க் அனுப்புகிறோம். அதனை கிளிக் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.
ரூ.1.34 லட்சம் மோசடி
இதனை உண்மை என்று நம்பிய குமரேசன் அந்த மர்ம நபர் அனுப்பிய லிங்கை கிளிக் செய்துள்ளார்.
அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து முதலில் ரூ.37 ஆயிரத்து 800, பின்னர் 2 முறை ரூ.48 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 800 எடுக்கப்பட்டு உள்ளதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த குமரேசன் மீண்டும் அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
அதன்பின்னரே குமரேசனுக்கு, தான் நூதன முறையில் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதனையடுத்து குமரேசன் இதுகுறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.