தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-03-20 18:48 GMT
புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் முள்ளூர் மருத்துவக் கல்லூரி  அருகே  புதுக்கோட்டை பிரிவு சாலையில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு எரியாததால் அப்பகுதியில் விபத்துகள் நடப்பதுடன், சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  விரைந்து நடவடிக்கை எடுத்து உயர்மின்கோபுரத்தில் உள்ள விளக்கை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

ஆபத்தான மின்கம்பம் 
கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியிலிருந்து வாங்கல் செல்லும் தார் சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்தின் வழியாக  அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்று மின் மோட்டார்களுக்கும், குடியிருப்பு வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வாங்கல், கரூர். 

பயனற்ற அடிபம்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் சேந்தன்குடி செல்லும் சாலை ஓரத்தில் குடியிருப்பு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்களின் குடிதண்ணீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் அடிபம்பு அமைத்துள்ளனர். நிலத்தடி நீர் கீழே சென்றதால் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போனது.  பயன்படுத்தப்படாத அடிபம்பில் இருந்த கைப்பிடி, இரும்பு குழாய்கள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள்  கழற்றிச் சென்றுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த அடிபம்பை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  பனசக்காடு, புதுக்கோட்டை. 

இடிந்து விழும் நிலையில் கட்டிடம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் புதுக்கோட்டை-ஆலங்குடி மெயின் ரோட்டில் உள்ள கடைவீதியில் வருவாய் ஆய்வாளர் கட்டிடமாக செயல்பட்டு வந்த கட்டிடம்  கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகே கால்நடைகள் செல்லும்போது திடீரென  இடிந்து விழுந்தால் அவை உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருவரங்குளம், புதுக்கோட்டை. 

சாலையோரத்தில் பள்ளம் 
திருச்சி மன்னார்புரம் முதல் காஜாமலை, அண்ணா விளையாட்டு அரங்கம் வரையுள்ள பழைய சாலையை நீக்காமல் அதன்மீதே புதிய சாலை போடப்பட்டு வருகிறது. இதனால் சாலை மேடுபோன்றும், சாலையோரம் பள்ளமாகவும் காணப்படுகிறது. சாலை ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி இந்த பள்ளத்தில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மன்னார்புரம், திருச்சி. 

ஆபத்தான மின்கம்பங்கள்
திருச்சி மாவட்டம், நவல்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட காவேரி நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் 4 மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் கீழே உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் ஒரு சில மின்கம்பங்கள் முறிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் மரத்துண்டுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களும் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காவேரி நகர், திருச்சி.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி காந்தி நகர் பகுதியில் உள்ள காலிமனையில் குப்பைகள் கொட்டப்படுவதினால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காலிமனைகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா  போன்ற காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காந்திநகர், திருச்சி. 
இதேபோல்  திருச்சி-கரூர் பைபாஸ் சாலையுடன் உறையூரை இணைக்கும் கோனகரை சாலை உள்ளது. அந்த பகுதி முழுவதும் குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. மேலும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உறையூர், திருச்சி.  

தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு 
திருச்சி காந்தி மார்க்கெட் மணிக்கூண்டு அருகே கட்டண கழிவறை உள்ளது. தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள புறநகர் போக்குவரத்து காவல் நிலையம் அருகேயும், அருகில் உள்ள கடைகளின் முன்பும் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காந்தி மார்க்கெட், திருச்சி. 

நெல்மணிகள் விரைந்து கொள்முதல் செய்யப்படுமா? 
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திண்ணியம் கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல் மணிகளை 25 நாட்கள் கழித்து வந்து அதிகாரிகள் அளந்து கொள்முதல் செய்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நெல் மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திண்ணியம், திருச்சி. 

மேலும் செய்திகள்