7 புறவழிச்சாலைகள் அமைக்கும் பணி இந்த ஆண்டு முடிக்கப்படும்
திருவாரூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட 7 புற வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட 7 புற வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
அமைச்சர் ஆய்வு
திருவாரூர்- குடவாசல்- கும்பகோணம் சாலை ஓடுதளம் மேம்பாடு செய்யும் பணி ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதையும், ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை வளைவு அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுசமயம் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி.கே.கலைவாணன், நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
7 புறவழி சாலைகள்
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாநில நெடுஞ்சாலைகள் 328 கிலோ மீட்டர், மாவட்ட முக்கிய சாலைகள் 230 கிலோ மீட்டர், மாவட்ட இதர சாலை 737 கிலோ மீட்டர் என மொத்தம் 1,295 கிலோ மீட்டர் சாலைகளை தமிழக அரசின் சார்பில் சீரமைப்பது, மேம்படுத்துவது மற்றும் விரிவுப்படுத்துவது போன்ற பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. 2021-22 நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் மூலமாக திருவாரூர் மாவட்டத்திற்கு ரூ.128 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சியில் திருவாரூர் மாவட்டத்தில் 7 புறவழி சாலைகள் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் புற வழிசாலை பணிகள் புறணிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.
தற்போது முதல்-அமைச்சர் தனது சொந்த மாவட்டம் என்பதை கருத்தில் கொண்டு தனி கவனம் செலுத்தி வருகிறார். இதில் திருத்துறைப்பூண்டியில் 2.46 கிலோ மீட்டர் புற வழிச்சாலை அமைப்பதற்கு ரூ.22.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்குகிறது. மீதமுள்ள 6 புறவழிச்சாலை பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டே முடிக்கப்படும்.
14 பாலப்பணிகள்
டெல்டா மாவட்டங்களில் கிராமங்கள் அதிக நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இந்த கிராம சாலைகளை மேம்படுத்துவதற்காக 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நபார்டு மூலம் ரூ.59.94 கோடியில் 19 பாலங்கள் கட்டப்பட உள்ளது. இதில் 14 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட கலெக்டரின் பரிந்துறையின் பேரில் கிராமப்புற அனைத்து சாலைகளும் மேம்படுத்தப்படும். தி.மு.க. ஆட்சியில் விபத்து இல்லாத வகையில் சாலைகள் விரிவுப்படுத்தி, உறுதியாகவும், தரமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்து வருகிறது.
நெடுஞ்சாலையை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் கையப்படுத்தும் பணிகள் கடந்த 11 ஆண்டுகளாக கிடப்பில் போட்டவை தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ளது. 8 வழி சாலை பணிகள் விவசாயிகளை பாதிக்காத வகையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மரக்கன்றுகள் நடும் பணி
முன்னதாக அரசவனங்காடு பகுதியில் சாலையோர மரக்கன்று நடும் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் காட்டூரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அருங்காட்சியக கட்டிடம் கட்டும் பணிகளை பார்வையிட்டார்.
இதில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளா கிருஷ்ணசாமி, கோட்ட பொறியாளர் சிவக்குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள், உதவி கலெக்டர் பாலசந்திரன், மாவட்ட பள்ளி வளர்ச்சிகுழு உறுப்பினர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.