பாடப்புத்தகத்தில் பகவத் கீதையை இணைக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது தர்மபுரியில் கி வீரமணி பேட்டி

பள்ளி பாடப்புத்தகத்தில் பகவத் கீதையை இணைக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என்று தர்மபுரியில் திகதலைவர் கிவீரமணி தெரிவித்தார்.

Update: 2022-03-20 17:47 GMT
தர்மபுரி:
பள்ளி பாடப்புத்தகத்தில் பகவத் கீதையை இணைக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என்று தர்மபுரியில் தி.க.தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
பாராட்டு விழா
தர்மபுரியில், மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட பெரியார் மண்டபம் திறப்பு விழா  நடைபெற்றது. விழாவுக்கு மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பரமசிவம் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், ஓய்வுபெற்ற தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் யாழ்திலீபன், மண்டல தலைவர் தமிழ்செல்வன், மண்டல செயலாளர் பழ பிரபு, முன்னாள் மாவட்ட தலைவர் சிவாஜி, தர்மபுரி பெரியார் மன்ற பொறுப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு புதுப்பிக்கப்பட்ட பெரியார் மன்றத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பட்ஜெட்
தமிழக அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட் கொள்கை பூர்வமான பட்ஜெட். ஏற்கனவே 10 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர்கள் கஜானாவை காலி செய்து விட்டு சென்றுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான கடன்களை வாங்கி விட்டு சென்றுள்ளனர். மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். மேலும் கடன் பெற வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதாகவும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த பட்ஜெட் வரியில்லாத பட்ஜெட். மேலும் விவசாயத்திற்கான தனி பட்ஜெட்டும் அறிவித்துள்ளனர்.
திராவிட மாடல் ஆட்சி
இதற்கு மேலாக கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்படாத நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். பெண்களை அமர வைப்பது தான் பெரியாரின் கருத்து, இதுதான் திராவிட மாடல் ஆட்சி. குஜராத் மாநிலத்தில் பள்ளி பாடப்புத்தகத்தில் பகவத் கீதையை இணைக்க முயற்சி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு கி.வீரமணி கூறினார்.

மேலும் செய்திகள்