நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் பாறாங்கற்களை போட்டு ரெயிலை கவிழ்க்க சதி சென்னை எக்ஸ்பிரஸ் அதிர்ஷ்டவசமாக தப்பியது

நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் பாறாங்கற்களை போட்டு ரெயிலை கவிழ்க்க நடந்த சதிதிட்டம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. பாறாங்கற்கள் மீது மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.

Update: 2022-03-20 17:45 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவில் அருகே தண்டவாளத்தில் பாறாங்கற்களை போட்டு ரெயிலை கவிழ்க்க நடந்த சதிதிட்டம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. பாறாங்கற்கள் மீது மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.
சென்னை எக்ஸ்பிரஸ் மோதியது
சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் 9.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் குருவாயூர் நோக்கி புறப்பட்டது. 
இரவு 10.45 மணிக்கு நாகர்கோவில் அருகே இரணியல்-குழித்துறைக்கு இடையே உள்ள பாலோடு பகுதியை சென்றடைந்த போது ரெயில், ஏதோ தண்டவாளத்தில் கிடந்த மர்மபொருள் மீது பலமாக மோதியது. பயங்கர சத்தமும் கேட்டு அதிர்வலைகள் உருவானது. இதனால் ரெயிலில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் திடுக்கிட்டு எழுந்தனர். எனினும் டிரைவர் ரெயிலை நிறுத்தாமல் இயக்கி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர் உடனே நாகர்கோவில் ரெயில்வே அதிகாரிகளுக்கும், ரெயில்வே போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். 
தண்டவாளத்தில் பாறாங்கற்கள் 
அதன்பேரில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் குமார்ராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த பகுதி முழுவதையும் ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளத்தில் யாரோ மர்ம நபர்கள் பாறாங்கற்களை வைத்து இருந்ததும், அந்த பாறாங்கற்கள் மீது தான் ரெயில் பயங்கரமாக மோதியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மோதிய வேகத்தில் பாறாங்கற்களை ரெயில் சுமார் 600 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றுள்ளது. இதன் காரணமாக தண்டவாளம் சேதம் அடைந்ததும் தெரியவந்தது. தண்டவாளம், காங்கிரீட்டை இணைக்கும் பகுதியான கப்ளிங் என்ற பகுதி உடைந்து கிடந்தது.
இந்த சம்பவத்தை பார்க்கும் போது தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க நடந்த சதி திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. பாறாங்கற்கள் மீது மோதிய போது அதிர்ஷ்டவசமாக ரெயில் தண்டவாளத்தை விட்டு விலகவில்லை. இதனால் ரெயில் பயணிகளுக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை. மோப்பாநாயும் வரவழைக்கப்பட்டு தண்டவாள பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.
ரெயிலை கவிழ்க்க சதி
இந்தநிலையில் நேற்று காலையில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரெயிலை கவிழ்க்க நடந்த சதி திட்டம் தொடர்பாக போலீசார் கூறுகையில், பெரிய பாறாங்கற்களை தண்டவாளத்தில் வைப்பது சுலபமான காரியம் இல்லை. எனவே மர்ம நபர்கள் கூட்டாக சேர்ந்து தான் இந்த சதிவேலையில் ஈடுபட்டிருக்க முடியும் என்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தண்டவாளத்தில் பாறாங்கற்களை போட்டு ரெயிலை கவிழ்க்க நடந்த சதி சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்