வல்லவாரி கடைவீதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அ.தி.மு.க.வினர் சாலை மறியல் தி.மு.க.வினர் போட்டி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் உள்ள வல்லவாரியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை தற்போது வல்லவாரி கடைவீதியில் புதிய கடைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அ.தி.மு.க. தொகுதி செயலாளர் காசிமணி தலைமையில் ஒரு தரப்பினர் அறந்தாங்கி பேராவூரணி சாலையில் பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் இந்த பகுதிக்கு அரசு டாஸ்மாக் கடை வேண்டும் என்று கூறி பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிகண்ணு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட இரு தரப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.