புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கிலி பறிப்பு சம்பவம் அதிகரிப்பு குற்றங்களை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
புதுக்கோட்டை:
சங்கிலி பறிப்பு சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு அதிகரித்துள்ளது. இதில் மர்மநபர்கள் தங்களது கைவரிசையை காட்டி நகைளை பறித்து வருகின்றனர். மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பாா்த்திபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் சமீபத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஓடும் பஸ்சில் பெண்களிடமும், சாலையில் நடந்து செல்பவர்களிடம் இந்த சங்கிலி பறிப்பு சம்பவம் அதிக அளவில் நடைபெறுகிறது. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
ரோந்து பணியை அதிகரித்தல்
சங்கிலி பறிப்பு சம்பவத்தில் இதற்கு முன்பு ஈடுபட்டவர்கள் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் இதுபோன்று குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனரா? அல்லது மர்ம கும்பல் இந்த சங்கிலி பறிப்பு சம்பவத்தை தொழிலாக அரங்கேற்றி வருகிறதா? என்பதை கண்காணித்து போலீசார் தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாவட்டத்தில் போலீசாரின் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும், புறக்காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும், புதிதாக போலீஸ் நிலையங்களை உருவாக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக உள்ளது. மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க கூடுதல் தனிப்படை அமைத்து போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.