பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்

விழுப்புரம் மற்றும் மேல்மலையனூரில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-03-20 17:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தை முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார் அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இந்த பள்ளியில் தான் அதிக அளவில் மாணவிகள் படிக்கின்றனர். ஆகவே இந்த பள்ளிக்கு முன்னுரிமை அளித்து கட்டிடங்களுடன் கூடிய கழிப்பறைகள் கட்டி தரப்படும் என்றார்.  மேலும் கூட்டத்தில் மேலாண்மை குழு முக்கியத்துவம், செயல்பாடுகள், பள்ளி வளர்ச்சியில் மேலாண்மை குழு பங்கு, பெற்றோர் பங்கு குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

மேல்மலையனூர்

இதேபோல் மேல்மலையனூர் அருகே வளத்தியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தற்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழுவினர் பள்ளி சிறப்பாக செயல்படவும், மாணவர்கள் சிறந்த கல்வி பெறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் பள்ளி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  இதில் வட்டார கல்விக்குழு தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான நெடுஞ்செழியன், தமிழ்நாடு இந்து கோவில் கூட்டமைப்பு தலைவர் பாபு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்