கடலில் நீச்சல் அடித்து சிறுமி சாதனை

தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே சுமார் 28 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியை 13 மணி நேரம் 10 நிமிடத்தில் நீச்சல் அடித்து சிறுமி சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-03-20 16:55 GMT
ராமேசுவரம், 
தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே சுமார் 28 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியை 13 மணி நேரம் 10 நிமிடத்தில் நீச்சல் அடித்து சிறுமி சாதனை படைத்துள்ளார். 
மும்பை சிறுமி
மும்பையில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் பணிபுரிபவர் மதன்ராய். இவரது மனைவி ரெஜினா ராய். இவர்களது மகள் ஜியாராய் (வயது13). பேச்சு திறனற்ற மாற்றுத்திறனாளியான இந்த சிறுமி இலங்கை தலை மன்னார்- தனுஷ்கோடி வரை கடலில் நீச்சல் அடித்து சாதனை புரிவதற்காக நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார்.
பின்னர் அங்கிருந்து நேற்று சிறுமி ஜியாராய் நேற்று தலைமன்னார் ஊர்மலை என்ற கடல் பகுதியில் இருந்து அதிகாலை 4.22 மணியளவில் நீச்சல் அடிக்க தொடங்கினார். நேற்று மாலை 5.32 மணிக்கு தனுஷ்கோடி கடற்கரை பகுதி வந்தடைந்து 13 மணி நேரம் 10 நிமிடத்தில் சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீச்சல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
பாராட்டு
அவருக்கு தமிழக காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு பூங்கொத்து கொடுத்தும், சந்தனமாலை அணிவித்தும் நேரில் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இதைதொடர்ந்து சிறுமியை தமிழக கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி. சின்னசாமி, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு கார்த்திக், ராமேசுவரம் நகரசபை துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசூராஜா, சகாயம், எமரிட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகளும், போலீசாரும்  உற்சாகத்துடன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
கடல் நீரோட்டம்
பின்னர் சிறுமியின் தந்தை மதன்ராய் நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கை தலைமன்னார் ஊர் மலை பகுதியில் இருந்து எனது மகள்அதிகாலை 4.22 மணிக்கு நீச்சல் அடிக்க தொடங்கினார். தனுஷ்கோடி பகுதிக்கு மாலை 5.32 மணிக்கு வந்தடைந்து உள்ளார். தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 28 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியை 13 மணிநேரம் 10 நிமிடத்தில் கடந்து சாதனை புரிந்துள்ளார் என தெரிவித்தார்.
சிரமம்
தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:- 
இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதி வரையிலும்  நான் ஒரு முறை நீந்தி உள்ளேன். மற்ற கடல் பகுதிகளை விட இந்த கடல் பகுதியில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. குறிப்பாக கடல் நீரோட்டத்தின் வேகம் மிக அதிகமாக இருப்பதுடன் இந்த கடலில் கடல் பாம்பு, ஜெல்லி மீன்கள், பல சுறா மீன்களும் அதிக அளவில் உள்ளதால் நீந்துவதில் மிகுந்த சிரமம் உள்ளது. சாதனை படைத்துள்ள ஜியாராயை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து நீந்த தொடங்கிய இந்த சிறுமிக்கு பாதுகாப்பாக இலங்கை கடல் எல்லை வரையிலும் மூன்று கப்பலில் இலங்கை கடற்படையினரும், தனுஷ்கோடி கடல் பகுதி வரையில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 3 கப்பலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.

மேலும் செய்திகள்