நிலத்தகராறில் கோடரியால் வெட்டி முதியவர் கொலை;மகன் கைது
குந்தாப்புரா அருகே நிலத்தகராறில் கோடரியால் வெட்டி முதியவரை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்
மங்களூரு:
குந்தாப்புரா அருகே நிலத்தகராறில் கோடரியால் வெட்டி முதியவரை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
நிலத்தகராறு
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா கோட்டேஸ்வர் அருகே கோப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்ம மரக்காலா(வயது 74). இவரது மகன் ராகவேந்திரா. இந்த நிலையில் தந்தை நரசிம்ம மரக்காலாவிடம், ராகவேந்திரா நிலத்தை பிரித்து தரும்படி கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு நரசிம்ம மரக்காலா சொத்தை பிரித்து கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதன்காரணமாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
முதியவர் கொலை
நேற்றுமுன்தினம் இரவும் ராகவேந்திரா, தந்தை நரசிம்ம மரக்காலாவிடம் நிலத்தை பிரித்து தரும்படி கேட்டுள்ளார். அப்போதும் அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ராகவேந்திரா, தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராகவேந்திரா, தந்தை என்று கூட பாராமல் வீட்டில் கிடந்த கோடரியை எடுத்து நரசிம்ம மரக்காலா தலையில் வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த நரசிம்ம மரக்காலா ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை, அப்பகுதியினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோட்டேஸ்வரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக உடுப்பி மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நரசிம்ம மரக்காலா பரிதாபமாக உயிரிழந்தார்.
மகன் கைது
இதுபற்றி அறிந்த குந்தாப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில், சொத்து தகராறில் நரசிம்ம மரக்காலாவை, அவரது மகன் ராகவேந்திரா கோடரியால் வெட்டி கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து ராகவேந்திராவை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.