குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்
தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர், ரவுடிகள் அனைவரும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரித்தார்.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர், ரவுடிகள் அனைவரும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரித்தார்.
கலந்தாய்வு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரக அளவிலான காவல் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன், போலீஸ் சூப்பிரண்டுகள் ராமநாதபுரம் கார்த்திக், சிவகங்கை செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள், சமூக விரோதிகளின் செயல்பாடுகள், அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள் மற்றும் விபத்துகளை குறைப்பது, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் எந்தவித பாரபட்சமும், சமரசமும் இன்றி நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவை தொடர்பாக, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உயர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஒப்படைப்பு
கூட்டத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் போலீசாரின் துரித நடவடிக்கையின் பயனாக இலங்கைக்கு கடத்த இருந்த 150 கிலோ கடல் அட்டை, 4 ஆயிரத்து 275 கிலோ மஞ்சள், 650 கிலோ சுறா பீளிகள், ஆயிரம் கிலோ சுக்கு, 2 கிலோ கஞ்சா மற்றும் 1½ கிலோ கொகைன் என்னும் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மண்டபம் கடலோர காவல் படையினரால் கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு கடத்த இருந்த 2½ டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் ஆயிரத்து 885 கிலோ மஞ்சள், 2 ஆயிரத்து 375 கிலோ கடல் அட்டை, 34 கிலோ கஞ்சா, 25 கிலோ ஏலக்காய், 30 கிலோ சுறா பீளிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.
இதன்பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் ரவுடிகளின் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி அதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தேவையான அறிவுரைகள், உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடும் நடவடிக்கை
வெளிநாடு மற்றும் வெளி மாநில குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், ரவுடிகள் அனைவரும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். போக்சோ சம்பவங்களில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு குற்றவாளிகளை கைது செய்து தண்டனை கிடைக்க செய்வதோடு அதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் போக்சோ தொடர்பான சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமல் புகார் அளிக்க வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உச்சிப்புளி காவல்நிலையத்திற்கு திடீரென்று சென்று ஆய்வு செய்தார். கோப்புகள் உள்ளிட்டவை சரியாக இருந்ததால் ரூ.ஆயிரம் பரிசு வழங்கி அனைவரையும் பாராட்டினார்.