விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கடமலைக்குண்டு:
விவசாயி
கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தை சேர்ந்தவர் சேர்மலை (வயது 44) விவசாயி. இவருடைய மனைவி சின்னவேல்தாய். இவர்களுக்கு விக்னேஷ் (14) என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது சின்னவேல்தாய் தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி மந்திசுனை கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சேர்மலை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
போடி புதூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பவித்ரா (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதில் பவித்ரா கோபித்து கொண்டு மயிலாடும்பாறையில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பவித்ரா தனது குழந்தைகளை அழைத்து வருவதற்காக கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது செல்வத்தின் பெற்றோர் குழந்தைகளை தர மறுத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பவித்ராவுடன் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரத்தில் மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினை
மயிலாடும்பாறை அருகே உள்ள தென்பழனி காலனியை சேர்ந்தவர் ராஜா (40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜா வருசநாடு வனச்சரக அலுவலகம் எதிரே உள்ள வனப்பகுதிக்கு சென்றார். அங்கு விஷ மாத்திரைகளை தின்று அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்