மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் பலி

தேனியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-20 15:50 GMT
தேனி: 


மின்வாரிய ஊழியர்
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி ஜவகர் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). இவர், தேனி மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வந்தார். அவருடைய உறவினர் வீட்டு வசந்த விழா பூதிப்புரம் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்  நடந்தது. இதில் கண்ணன் கலந்து கொண்டார்.

பின்னர் அங்கு வந்திருந்த கண்ணனின் நண்பரான தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்த கணேசன் (45) தனது வீட்டுக்கு ஆட்டோவில் புறப்பட்டார். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) ஓட்டினார்.
கணேசனை வீட்டில் இறக்கி விடுவதற்காக அந்த ஆட்டோவில் கண்ணன், அவருடைய நண்பர்களான ஜவகர் நகரை சேர்ந்த மணிகண்டன் (35), பழனிச்சாமி (36), நாகராஜ் (21) ஆகியோரும் பயணம் செய்தனர்.

ஆட்டோ-லாரி மோதல்
தேனி பங்களாமேடு திட்டச்சாலை வழியாக மதுரை சாலைக்கு சென்ற அவர்கள், அங்கிருந்து பழைய டி.வி.எஸ். சாலைக்கு திரும்ப முயன்றனர். அப்போது மதுரை சாலையில் நேரு சிலை சிக்னல் பகுதியில் இருந்து வந்த லாரி, ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ அப்பளம் போன்று நொறுங்கியது. 

ஆட்டோவில் இருந்து தூக்கி வீசப்பட்ட 6 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு தேனி போலீசாரும் விரைந்து வந்தனர்.

2 பேர் பலி 
விபத்தில் காயம் அடைந்த கண்ணன், மணிகண்டன், பழனிச்சாமி, கணேசன், நாகராஜ், ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மணிகண்டன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

இந்த விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான கொண்டாரெட்டி (45) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் ஆட்டோ டிரைவர் ஆவார். 

தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு நண்பர்களுடன் ஆட்டோவில் வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் ஒரே பகுதியை சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் ஜவகர் நகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்