கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை தனியார் தொழிற்சாலையில் தொழிலாளி மர்ம சாவு
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தலையில் ரத்த காயத்துடன் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் சந்தேக சாவாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலையில் ரத்தக்காயம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயர்பாடியை சேர்ந்தவர் பாபு(வயது 48). இவர், கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் மிஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். பாபுவிற்கு திருமணமாகி காயத்ரி(44) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று வழக்கம் போல தொழிற்சாலையில் எந்திரத்தை இயக்கி கொண்டிருந்த பாபு அப்படியே கீழே விழுந்ததாகவும், இதனால் அவரது தலையில் இரும்பு பொருள் பட்டு ரத்தகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தேக சாவாக வழக்கு
இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், அவர் இறந்திருப்பதால் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சந்தேக சாவாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என பாபுவுடன் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளனர்.