ஊட்டி மூலிகை பண்ணையில் சோலை மரக்கன்றுகள் உற்பத்தி

அழியும் காடுகளை பாதுகாக்க ஊட்டி மூலிகை பண்ணையில் சோலை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.

Update: 2022-03-20 14:36 GMT
ஊட்டி

அழியும் காடுகளை பாதுகாக்க ஊட்டி மூலிகை பண்ணையில் சோலை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது என்று அதிகாரி தெரிவித்தார்.

மூலிகை பண்ணை

கோவை வன மரபியல் கோட்டத்தின் கீழ் ஊட்டி வன ஆராய்ச்சி சரகம் கட்டுப்பாட்டில் எச்.பி.எப். பகுதியில் புரூக்ஹம்டன் மூலிகை பண்ணை செயல்பட்டு வருகிறது. 

இந்த பண்ணையில் விக்கி, நாவல், செண்பகம், கம்பளிவெட்டி உள்பட 60 வகைகளை சேர்ந்த சோலை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 

ஆண்டுதோறும் 10 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, பல்வேறு அரசுத்துறைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர்.

மீண்டும் உற்பத்தி தீவிரம்

குறிப்பாக ரோஸ்மேரி, தைம், லெமன்கிராஸ், வசம்பு, பெப்பினோ, லிப்பியா உள்பட 70 ரகங்களை சேர்ந்த மூலிகை தாவரங்கள் பசுமை குடிலில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. அதில் அதன் அறிவியல் பெயர், பயன்கள் குறிக்கப்பட்டு இருக்கிறது.

 சோலை மரக்கன்று ரூ.20, மருத்துவ தாவரம் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் சோலை நாற்றுகள், மருத்துவ தாவரங்கள் உற்பத்தி மிகவும் குறைவாக காணப்பட்டது. 

தற்போது சோலை நாற்றுகள் உற்பத்தி மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 

சோலை மரங்கள் அவசியம்

சோலை மரக்கன்றுகள் நன்றாக வளர்ந்து தண்ணீரை உறிஞ்சி வைக்கிறது. அதன் மூலம் பாசிகள், சிறிய புற்கள் வளர்வதால் புதிதாக சிறிய வனப் பகுதி உருவாகும். 

மூலிகை பண்ணையில் சோலை மர விதைகளை சேகரித்து நஞ்சு அல்லது ரசாயனம் இல்லாமல் இயற்கை முறையில் நாற்றுகள் வளர்த்து பராமரிக்கப்படுகிறது.

குறிப்பாக மாட்டு சாணம் மூலம் விதைகள் 45 நாட்களில் வளர்ந்து விற்பனைக்கு தயாராகிறது. நீலகிரியில் அதிகமாக அன்னிய மரங்கள் உள்ளன.

 இதனால் மண் வளத்துக்கு பயனில்லை. அழியும் காடுகளை பாதுகாக்கவும், காடுகள் அழியாமல் இருக்கவும் சோலை மரங்கள் அவசியம். இதை கருத்தில் கொண்டு சோலை மரக்கன்றுகள் ஆராய்ச்சி மூலம் உற்பத்தி செய்து விற்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்