ஓவேலி செந்தூர் முருகன் கோவில் விழாவில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
கூடலூர் அருகே ஓவேலி செந்தூர் முருகன் கோவில் விழாவில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கூடலூர்
கூடலூர் அருகே ஓவேலி செந்தூர் முருகன் கோவில் விழாவில் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
செந்தூர் முருகன் கோவில் விழா
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அண்ணாநகரில் செந்தூர் முருகன் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 18-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து உச்சிகால தீபாராதனை, ஆற்றங்கரையில் இருந்து அம்மன்குடி அழைப்பு நிகழ்ச்சி, அலங்கார சிறப்பு பூஜைகள், மாவிளக்கு பூஜை, திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் செந்தூர் முருகன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவடி எடுத்து நேர்த்திக்கடன்
இதை தொடர்ந்து முருகனுக்கு மகா அபிஷேகமும், அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணிக்கு பாரம் ஆற்றங்கரையில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் பறவை காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
பின்னர் மூலவர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு செந்தூர் முருகப்பெருமானுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், தொடர்ந்து அம்மன் கரகம் கூடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது
இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.