பலத்த காற்று வீசியதால் நூற்றுக்கணக்கான குலைதள்ளிய வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன
பலத்த காற்று வீசியதால் நூற்றுக்கணக்கான குலைதள்ளிய வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன;
குடிமங்கலம்:
பெதப்பம்பட்டி அருகே பலத்த காற்று வீசியதால் நூற்றுக்கணக்கான குலைதள்ளிய வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாழை சாகுபடி
குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறிப்பயிர்கள் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, வாழை, உள்ளிட்ட ஆண்டுப் பயிர்கள் சாகுபடி படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு கூலியாட்கள் பற்றாக்குறை, போதிய விலை இல்லாமை, வருமானம் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ள நிலையில் தற்போது சொட்டுநீர் பாசனத்தில் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முறிந்து சேதம்
வாழை சாகுபடியை பொறுத்தவரை நடவு முதல் அறுவடை வரை ஓராண்டு காலத்தில் பருவ மழை, காற்று, கோடை என எல்லாப் பருவங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. பருவமழை போதுமான அளவில் பெய்யாத ஆண்டுகளில் கடும் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. அதுபோன்ற சூழலிலும் வறட்சியால் பயிர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது வாழை மரங்கள் தான் முதலில் பாதிக்கப்படுகிறது.
இதனால் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாவதுடன் கடும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை உள்ளது. இதனால் தான் பல விவசாயிகள் வாழை சாகுபடியை கைவிட்டு காய்கறி உள்ளிட்ட மாற்றுப் பயிர்களுக்கு மாறிவிட்டனர். இந்த நிலையில் பெதப்பம்பட்டி அருகே பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாழைகள் வீசிய பலத்த காற்றின் காரணமாக முறிந்து சேதம் அடைந்தன. இந்த வாழைகள் குலைதள்ளிய நிலையில் இன்றும் ஓரிரு மாதங்களில் அறுவடைசெய்யலாம். ஆனால் மகசூல் தரும்ேவளையில் சாய்ந்து விட்டது. இதனால் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.