குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரர் ஏரியில் மூழ்கி பலி

குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரர் ஏரியில் மூழ்கி பலியானார்

Update: 2022-03-20 13:05 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரர் ஏரியில் மூழ்கி பலியானார்.

ஏரியில் மூழ்கி பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரிய கொம்மேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (வயது 51) முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு பர்வதம் என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பெருமாள்சாமி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக குடியாத்தம் அடுத்த பாக்கம் துணை மின்நிலையத்தை சேர்ந்த மின் வாரிய பண்டகசாலையில் இரவு காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த மின்வாரிய பண்டகசாலையின் எதிரே பாக்கம் ஏரி உள்ளது.

 கடந்த பல மாதங்களாக பாக்கம் ஏரி நிரம்பி வழிகிறது. வழக்கம்போல் காலைக்கடன் கழிக்க பாக்கம் ஏரிக்கு பெருமாள்சாமி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உள்ளார். நீச்சல் தெரிந்தும் ஏரியில் உள்ள செடி கொடிகளில் சிக்கியதால் பரிதாபமாக இறந்துள்ளார்.

போலீஸ் விசாரணை

காலையில் வழக்கம்போல் பணிக்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு காவலாளி பெருமாள்சாமி இல்லாததால், பாக்கம் ஏரிப் பகுதியில் தேடியபோது ஏரி கரையில் பெருமாள் சாமியின் காலணிகள் இருந்தது. இதனையடுத்து உடனடியாக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி பெருமாள் சாமியின் உடலை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்