அடுத்த தலைமுறைக்கு தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு. கலெக்டர் பேச்சு
அடுத்த தலைமுறைக்கு தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.
அடுக்கம்பாறை
அடுத்த தலைமுறைக்கு தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.
தொடக்கவிழா
வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு தொடக்க விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம், கட்டிட கமிட்டி தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெகதீசன் வரவேற்றார்.
கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பள்ளி மேலாண்மைக் குழுவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
நல்ல தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு
கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. எந்த வயதானலும் நம்முடன் இருப்பது கல்வி மட்டுமே. மற்ற எந்த பொருளை நாம் வைத்திருந்தாலும் திருடுபோகவோ அல்லது தொலைந்து போகவோ கூடும். ஆனால் கல்வி மட்டுமே நமக்கு என்றும் நிரந்தரம். ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்களை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற மட்டுமே பயன்படுத்தக்கூடாது. அதனை வாழ்வின் முன்னேற்ற பாதைக்கு ஏற்றவாறு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
வாழ்க்கையில் தேர்ச்சி பெறுவதற்கும் ஆசிரியர்கள் கற்றுத்தரும் பாடங்கள் தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பள்ளியில் மாணவர்கள் ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு தேவையான நல்ல தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உண்டு. மாணவர்கள் நன்றாக படித்து ஆசிரியருக்கும், பள்ளிக்கும் நல்ல பெயரை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தரம் உயர்த்த கோரிக்கை
விழா முடிந்ததும் மாணவர்களின் பெற்றோர், மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த மேலாண்மைக்குழு தொடக்க விழாவிலும் கலெக்டர் பங்கேற்றார்.
இதேபோல் ஊசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சோபனா, துணைதலைவர் கவிதாசிவகுமார், வட்டார கல்வி அலுவலர் கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்விக்குழு உறுப்பினர் சசிகலா வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரியர்கள் சிவகுமார், ரோஸ்லின், ஊராட்சி செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அத்தியூர் ஊராட்சி குருமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெய்சங்கர், தலைமை ஆசிரியர் கேசவமூர்த்தி, வார்டு உறுப்பினர் பூங்கொடிசேகர், ஊராட்சி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மேலாண்மை குழு தலைவர் கவுரி வரவேற்றார். இதில் மாணவர்களின் கல்வி முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.