கோவில்களில் அறங்காவலர் குழுவில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை இணைக்க கூடாது
கோவில்களில் அறங்காவலர் குழுவில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை இணைக்கக்கூடாது, என்று இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் பேசினார்.
திருவண்ணாமலை
கோவில்களில் அறங்காவலர் குழுவில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை இணைக்கக்கூடாது, என்று இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் பேசினார்.
இந்து முன்னணி வேலூர் மண்டல பொதுக்குழு கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடந்தது.
அதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் பங்கேற்று பேசியதாவது:-
அரசியல் கட்சிகளின் தலையீடு
இந்திய நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் மதமாற்ற சட்டைத்தைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மத மோதல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் தமிழகத்தில் அமைதி இல்லாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
கோவில்களில் அறங்காவலர்கள் குழு நியமிப்பதில் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்கக் கூடாது.
அரசியல் கட்சியில் உள்ளவர்களை அறங்காவலர் குழுவில் எடுக்கக் கூடாது. அவ்வாறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை குழுவில் நியமித்தால் அதிகளவில் ஊழல்கள் நடக்கும்.
எனவே கோவில்களில் அறங்காவலர் குழுவில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களை இணைக்கக்கூடாது.
பெரும் பிரச்சினை
மேலும் தற்போது ஹிஜாப் பிரச்சினை தொடர் பிரச்சினையாக மாற்றப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணிவதை யாரும் ஆட்ேசபனை தெரிவிக்கவில்லை.
பள்ளிக்கு வரும்போது மாணவர்கள் சீருடை அணிவது மிகவும் அவசியம். அங்கு மத உணர்வை தூண்டுவது தவறு.
தமிழகத்தில் அதிகளவில் இந்துக்கள் உள்ளனர். இதனை அரசு சரி செய்யவில்லை என்றால் பெரும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் அரசாங்கம் உண்மையான மதநல்லிணக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக நடந்த கூட்டத்துக்கு கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார்.
மாநில அமைப்பாளர் பக்தன், மாநில செயலாளர் மனோகரன், புதுச்சேரி மாநில தலைவர் சுனில்குமார், கோட்ட அமைப்பாளர் ராஜேஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் நன்றி கூறினார்.