போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு திட்டம்: போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.
189 பேர் கைது
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை சென்னையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 581 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மெத்தம்பட்டமைன் என்ற புதுவகையான போதைப்பொருள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில்தான் தயாரிக்கப்பட்டது. தற்போது ஆந்திராவில் தயாரிக்கப்படுவதை கண்டுபிடித்துள்ளோம். ஆந்திராவில் செயல்பட்ட அது தொடர்பான ஆய்வகம் ஒன்றை மூடி உள்ளோம்.
மறுவாழ்வு திட்டம்
போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்பவர்களை பிடிப்பது மட்டுமின்றி, அதை பயன்படுத்துவதையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதி அவர்களுக்கு மறுவாழ்வு திட்டம் ஒன்றை தொடங்கி உள்ளோம். போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஓரளவு எங்களிடம் உள்ளது. அது பற்றி முழு அளவில் சர்வே ஒன்றும் எடுக்கப்படுகிறது.
சுகாதார துறையுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் உரிய அறிவுரை வழங்கப்படும்.
மோப்பநாய் உதவி
சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் மூலம் போதைப்பொருள் கடத்துவதை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்படுகிறது. அனைத்து வாகனங்களையும் சோதனை போடுவது கடினமாக உள்ளது. எனவே மோப்பநாய் உதவியுடன் போதைப்பொருள் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.