கார் நிறுத்துவது தொடர்பாக வயதான பெண்ணுடன் தகராறு செய்த வழக்கில் டாக்டர் கைது
கார் நிறுத்துவது தொடர்பாக வயதான பெண்ணுடன் தகராறு செய்த வழக்கில் டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் ராம்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் டாக்டர் சுப்பையா சண்முகம் (வயது 58). புற்றுநோய் நிபுணரான இவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் பிரிவு தலைவராக இருந்து வந்தார். மேலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின்(ஏ.பி.வி.பி.) முன்னாள் தேசிய தலைவராகவும் இருந்தார்.
அதே குடியிருப்பில் வசித்து வரும் வயதான பெண்மணி ஒருவருடன், கார் நிறுத்துவது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வயதான பெண் வீட்டின் முன் டாக்டர் சுப்பையா சண்முகம் அநாகரிகமாக நடந்து ெகாண்டார். இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு தொடர்பாக நேற்று வீட்டில் இருந்த டாக்டர் சுப்பையா சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் வைஷ்ணவி முன் ஆஜர்படுத்தினர். டாக்டர் சுப்பையா சண்முகத்தை வருகிற 31-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திேரட் உத்தரவிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல்-அமைச்சர் வீட்டின் முன் போராட்டம் நடத்தியதாக கைது செய்து சிைறயில் அடைக்கப்பட்ட ஏ.பி.வி.பி. அமைப்பை சேர்ந்தவர்களை டாக்டர் சுப்பையா சண்முகம் நேரில் சந்தித்ததால் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி புற்றுநோய் பிரிவு தலைவர் பணியில் இருந்து டாக்டர் சுப்பையா சண்முகத்தை மருத்துவ கல்வி இயக்குனரகம் பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.