புதைத்த வெடி மருந்துகள் வெடித்து சிதறியது குழந்தைகள் உள்பட 6 பேர் காயம்
ராஜாக்கமங்கலம் அருகே புதைத்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியது. இதில் குழந்தைகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். 10 வீடுகள் சேதமடைந்தன.
ராஜாக்கமங்கலம்,:
ராஜாக்கமங்கலம் அருகே புதைத்த வெடிமருந்துகள் வெடித்து சிதறியது. இதில் குழந்தைகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். 10 வீடுகள் சேதமடைந்தன.
மீண்டும் சம்பவம்
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே ஆறுதெங்கன்விளை பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜன் என்ற ராஜன், தொழிலாளி. இவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது.. அவ்வாறு பட்டாசு தயாரிப்பதற்காக வீட்டின் முன்பு உள்ள சிறிய அறையில் வெடி மருந்தை சாக்குப்பையில் வைத்து இருந்தார். அந்த அறைக்குள் ராஜனின் மகள் வர்ஷா (வயது 10) சென்ற போது, வெடிமருந்து வெடித்தது. இதில் வர்ஷா உடல் சிதறி பரிதாபமாக இறந்தாள். மேலும் வீடும் தரை மட்டமானது.
இந்த சம்பவம் கடந்த 14-ந் தேதி நடந்தது. இந்தநிலையில் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு மண்ணில் புதைத்து வைத்திருந்த வெடி மருந்துகள் வெடித்து சிதறிய சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வெடிமருந்து வெடித்து சிதறியது
தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (42). இவர் மரப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் பின்புறம் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அந்த தோப்பில் மண்ணை தோண்டி புதைத்து வைத்து இருந்த வெடிமருந்து நேற்று இரவு 7 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
வெடிமருந்து வெடித்த சத்தம் சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு கேட்டது. அந்த பகுதி முழுவதும் வீடுகள் அதிர்ந்தன. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு சாலைக்கு ஓடி வந்தனர்.
6 பேர் காயம்
வெடிமருந்து வெடித்து சிதறிய இடத்தின் அருகே உள்ள ராஜேந்திரன் வீட்டின் கதவு தனியாக பறந்தது. மேலும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. சுவரிலும் கீறல் ஏற்பட்டது. மேலும் அவர் வீட்டை சுற்றியுள்ள வீடுகளிலும் கதவுகள் பறந்தன. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. வெடிமருந்து வெடித்த சம்பவத்தால் 10 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சேதம் அடைந்தன.
அவ்வாறு கண்ணாடி நொறுங்கியது போன்ற சம்பவங்களால் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
4 அடிக்கு பள்ளம்
இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்த்தனர்.
அப்போது வெடிமருந்து வெடித்த தென்னந்தோப்பில் சுமார் 4 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளது.
மோப்பநாய் மூலம் சோதனை
அதைத்தொடர்ந்து தர்மபுரம் பகுதியில் வேறு இடங்களில் வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மோப்பநாயுடன் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினார்.
வெடிபொருள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து ராஜேந்திரன் மற்றும் அவருடைய மனைவியை காணவில்லை. அவர்கள் எங்கு சென்றனர் என்றும் தெரியவில்லை. இவர்களுக்கு வெடி மருந்துகள் கிடைத்தது எப்படி? என்று தெரியவில்லை.
இந்தநிலையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜேந்திரன் மனைவியின் ஊர் ஆறுதெங்கன்விளை என்று தெரிய வந்தது. ஏற்கனவே வெடிமருந்து வெடித்து சிதறியதில் சிறுமி இறந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள வெடி மருந்துகளை தர்மபுரத்துக்கு கொண்டு வந்து ராஜேந்திரன் பதுக்கி வைத்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
ராஜாக்கமங்கலம் பகுதியில் அடுத்தடுத்து வெடி மருந்துகள் வெடித்து சிதறிய சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.