ஆட்டோ டிரைவரை கடத்தி கொல்ல முயற்சி: ரவுடியின் கூட்டாளிகள் 9 பேர் கைது

பெங்களூருவில், ஆட்டோ டிரைவரை கடத்தி கொல்ல முயன்றதாக ரவுடியின் கூட்டாளிகள் 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-03-19 21:43 GMT
பெங்களூரு:

கள்ளக்காதல்

  பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் மணி. ரவுடியான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த ரவுடியான ஆண்ட்ரோஸ் என்பவரை கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் மணியின் மனைவிக்கும், யஷ்வந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  இதுபற்றி சிறையில் இருக்கும் மணிக்கு தெரியவந்தது. அவர் சிறையில் இருந்தே அந்த ஆட்டோ டிரைவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். சிறையில் இருந்தே செல்போனில் தனது கூட்டாளிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய மணி, ஆட்டோ டிரைவரை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்து உள்ளார்.

9 பேர் கைது

  இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இரவு யஷ்வந்தபுரம் ரெயில் நிலையத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த ஆட்டோ டிரைவரை சிலர் ஆட்டோவில் கடத்தி சென்றனர். பின்னர் அவரை ஒரு வீட்டில் சிறை வைத்து தாக்கியதாக தெரிகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ டிரைவரை மீட்டனர்.

  மேலும் அவரை கடத்தி தாக்கிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவரின் சகோதரர் அளித்த புகாரின்பேரில் கைதான 9 பேர் மீதும் ஆட்டோ டிரைவரை கொல்ல முயன்றதாக ஆர்.எம்.சி.யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கைதானவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள், 8 செல்போன்கள், ஒரு ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்